Friday, 2 April 2010

பெரியார் பேசிய பெண்ணுரிமை!

பெரியார் களஞ்சியம் தொகுதி 5-இல் 129-வது பக்கத்தில் "எஜமான் அடிமையை விட மோசமானது பெண்ணடிமை" என்ற தலைப்பில் 26.01.1931-ஆம் ஆண்டில் ஈரோடு தாலுகா பெருந்துறைக்கடுத்த கிரே நகர் சிற்றூரில் நடைப்பெற்ற ஆதிதிராவிடர் ஆண்டு விழாவில் பெரியார்....

"பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி கீழ்ஜாதிக்காரனை மேல் ஜாதிக்காரன் நடத்துவதை விட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எஜமான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும் என சொற்பொழிவை தொடங்குகிறார்

நான் எத்தனை பொண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன். எத்தனை கிழவனானாலும் எனக்குப் பொண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுபவிப்பேன். ஆனால் பெண்ணாய்ப் பிறந்த நீ ஒரு புருஷன்தான் கட்டிக் கொள்ள வேண்டும். அவன் செத்துப்போனாலும் புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு. ஆண் பெண் சேர்ந்து அனுபவிக்கும் இன்பம் என்பதாக ஒரு குணம் உண்டு என்பதை மறந்துவிட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கும் கடவுள், மதம், முன்ஜன்மப் பலன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத்தனமுமான விஷயமாகும். இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக்கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள நினைப்பது சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப்பட்டிருக்கின்றது என்கிறார் பெரியார்.

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டு போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படிச் சொல்வது தப்பு என்றும் ஒழுக்கம் கெட்டுப் போகும் என்றும் ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் புத்தி சொல்லுங்கள் என்றும் சொல்ல வருவார்கள். ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டது. கல்யாணம் செய்து கொள்ளுவதே அடிமைப்பிரவேசம் என்றாய்விட்டது. ஒரு மனிதனாவது இவர்கள் சொல்லுகிறபடி யோக்கியனாகவில்லை.

ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது. இதுவரையில் ஆண்கள் பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம். பலனேற்படவில்லை என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம் சென்று இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்லுகின்றோம். இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இதுபோல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்லுகின்றோம். இஷ்டப்பட்டவர்கள் இந்த முறையில் சேர்ந்து வாழட்டும். இஷ்டமில்லாதவர்கள் கல்யாணத்தை ரத்து செய்து கொண்டு தனித்தனி வாழட்டும். இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும். பயப்படக்கூடாது. பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகை செய்து கொள்ள வேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும். என்கிறார் பெரியார்.


Bookmark and Share

No comments:

Post a Comment