Friday, 16 April 2010

அம்பேத்கர் என்ற பெரியவர்!

“நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும்” – பீமாராவ் அம்பேத்கர்

1. நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும்.

2. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.

3. ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவைக் கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கு ஆதரவாக அது ஒரு போதும் தலையசைத்ததுகூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும்கூட, அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவு, சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.

4. சமூகம்’ இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.

5. வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும்.

6. இந்து சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ளவர்கள் கல்வி கற்பது கடுமையான குற்றமாக கருதப்பட்டது. இதை மீறி கல்வி கற்பவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மையற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்: அவர்களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது

7. கல்வி சாதியை ஒழித்து விடுமா? இதற்குரிய பதில் ‘ஆம்’; அதே நேரத்தில் ‘இல்லை’! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். மேல் சாதியில் இருக்கும் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒருவர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில்,படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.

8. தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.

9. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும், புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே உணர்வோடு ஏன் கொண்டாடுவதில்லை. புத்தருடைய காலத்தில்,1. வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும், என்றென்றும் மாறாததாகவும் கருதப்பட்டது 2. யாகம் 3. சதுர்வர்ண தர்மம் (நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் அது அறிவுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டல்ல அது தவறே இல்லாதது. வேதங்கள் புனிதமானவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்காகக் கருதினார். வேதங்களை ஏற்பதற்குப் பதில், அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது.

10. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்

No comments:

Post a Comment